இன்று நம் மக்களிடையே மிகவும் பிரபலமான வார்த்தையாக ஆர்கானிக் திகழ்கிறது. கடைகளில் ஆர்கானிக் லேபிள் ஒட்டப்பட்டு இருமடங்கு விலைக்கு விற்கப்படும் உணவுகளின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஆர்கானிக் உணவுகள் என்பவை, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயனக் கலப்பில்லாதவை, அதிக சத்துக்கள் கொண்டவை என்று விளம்பரப் படுத்தப் படுகின்றன. உண்மையில் இத்தகைய இயற்கை வேளாண் விளை பொருட்கள் (ஆர்கானிக்) ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை முழுதும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக குறைந்த அளவில் பயன்படுத்தப் படுகின்றன.
ஆர்கானிக் விளைபொருட்களில் விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு, வழக்கமான முறையில் பயிரிடப்படும் விளைபொருட்களை விட அதிகமான சத்துக்களோ, வைட்டமின்களோ இல்லை என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள். மேலும் 2002 ஆம் ஆண்டு ஆர்கானிக் தரநிலைகளின் அடிப்படையில், 38 செயற்கை மூலப்பொருட்களை ஆர்கானிக் உணவு பதப்படுத்துவதற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆகவே USDA தரச் சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவுப் பொருட்களில் முழுமையான இயற்கைத் தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஆர்கானிக்: ஒரு புரிதல்
- ரசாயனக் கலப்பிலாத விதைகள், மண், நீர், உரம், அனைத்தும் இயற்கையாக இருக்க வேண்டும்
- பாரம்பரிய விதைகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்
- விளைபொருட்களை பதப்படுத்தி, சந்தைப் படுத்தும் வரை எந்த ரசாயன சேர்மானமும் கூடாது.
இந்த மூன்று விசயங்களில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் முக்கால்க் கிணறு தாண்டிய கதைதான்.
இவ்வாறு தயாரிக்கப் படும் ஒரு இயற்கை விளைபொருள் அதிக பட்சமாக ஒரு மாதம் பூச்சிகள் மற்றும் கிருமிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
ஆனால் தற்போது சந்தையில் கிடைக்கும் ஆர்கானிக் என்று சொல்லப் படுகின்ற உணவுப் பொருட்களின் ஷெல்ப் லைப் (shelf-life) ஆறு மாதம், ஒரு வருடம் என்று அச்சிடப் பட்டிருக்கிறதே எப்படி?
நம் வீட்டுக்கு வாங்கி வந்த பின்னும் கூட பல நாட்கள் கழித்தும் பூச்சி, வண்டுகள் வராமல் இருக்கிறதே எப்படி?
ஆர்கானிக் சான்றிதழ்:
இயற்கை வேளாண் விளை பொருட்களைக் கண்காணிக்க உலகம் முழுவதும் பல அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் பல ஆய்வுகளுக்குப் பிறகு ஆர்கானிக் சான்றிதழ் வழங்குகிறது.
பல வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள் அது குறித்த ஆதாரங்களை வழங்கினால் ஓராண்டுக்குள் ஆர்கானிக் சான்று கிடைத்துவிடும். புதிதாக இயற்கை விவசாயத்தில் நுழைபவர்கள் மூன்றாண்டு காலம் அதைக் கடைபிடித்துக் காட்ட வேண்டும். ஆர்கானிக் சான்றளிப்புத் துறையினர் தொடர்ந்த கண்காணிப்புகளுக்குப் பிறகே சான்று வழங்குவர்.
இந்தியாவில் அப்பீடா (APEDA- Agricultural and Processed Food Products Export Development Authority) வழங்கும் ஆர்கானிக் சான்றிதழுக்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல மதிப்பு உள்ளது. நாம் வாங்கும் ஆர்கானிக் உணவுப் பொருட்களில் இத்தகைய சான்றுகளை சரிபார்த்து வாங்க வேண்டும்.
ஆர்கானிக் தானியங்கள்:
ஆர்கானிக் உணவுப் பொருட்கள் போலவே தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருபவை சிறுதானியங்கள். தினை, கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், பனிவரகு ஆகியவை சிறுதானியங்கள். பாரம்பரிய மற்றும் மருத்துவ குணங்களுக்காக இவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளது உண்மையில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி.
பிரச்சனை என்னவென்றால் நம்மிடம் சிறு தானியங்களை தோல் மற்றும் உமி நீக்கும் கருவிகள் பெரும்பாலும் சரியாகக் கையாளப் படுவதில்லை. இத்தகைய புதிய கருவிகளையும், தொழில் நுட்பத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் பல இடங்களில் இன்னும் அரிசி உமி நீக்கும் கருவிகளே சிறு மாறுதல்கள் செய்யப் பட்டு பரவலாக பயன்படுத்தப் படுவதால், அவற்றின் தோல் முழுமையாக பட்டை தீட்டப்படுகிறது.
அவற்றின் நல்ல நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதன் உமி மற்றும் தவிட்டில் தான் அதிகமிருக்கும் என்று சொல்லித் தெரிவதில்லை. இப்போது சந்தைகளில் கிடைக்கும் தானியங்கள் பளபளப்பாக பட்டை தீட்டப் பட்டவையே. இத்தகைய தானியங்களுக்கும் நம் அரிசிக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்காது. ஆக நாம் நல்லது என்று நினைத்து அதிக விலை கொடுத்து வாங்கி உண்பது சத்துக்கள் நீக்கப்பட்ட சக்கைகளைத் தான். சிறுதானியங்களை தவிட்டுடன் வாங்கி உடனே பயன்படுத்தும் போதுதான் அவற்றின் முழுப் பலன்கள் கிடைக்கும்.
ஆர்கானிக் காய்கறிகள்:
36 வயதினிலே திரைப்படம் வெளியானபின் எங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்ததோடு, இப்போதெல்லாம் நல்ல லாபம் கிடைக்கிறது என்கிறார்கள் சில ஆர்கானிக் கடைக்காரர்கள். அந்தப் படத்தின் கேரள வெர்சன் பார்த்தவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும், அவர்கள் தமிழ்நாட்டுக் காய்கறிகளைத் தான் சாடுகிறார்கள் என்று. தமிழகம் மற்றும் கர்நாடகாவை சார்ந்திருக்காமல் தாங்களே தங்களுக்குத் தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொள்வதற்கான கேரளத்தின் விழிப்புணர்வு முயற்சி அது.
விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளைப் பெற்று, வெவ்வேறு இடங்களுக்கு போக்குவரத்து மூலம் எடுத்துச் சென்று, கிடங்குகளில் சேமித்து பின் அவற்றை சந்தைபடுத்தும் வரை பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வியாபாரிகள் உபயோகிக்கும் மருந்துகள் அரசாங்கம் அனுமதித்த அளவிற்குள் இருக்க வேண்டும்.
நாமும் கொஞ்சம் பொறுப்பேற்று நல்ல காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அழகான, பளபளப்பான காய்கனிகள் மட்டும் வேண்டுமென்றால் பிரச்சனை தான். அந்தந்த சீசனில் கிடைக்கும் நாட்டு ரகக் காய்கறிகளை வாங்குவது நல்லது. மற்ற சீசனில் அல்லது வெளியூர்களில் மட்டும் விளையும் காய்கறிகள் வேண்டுமென்றால் அவற்றிற்கான விலையை நாம் தந்துதான் ஆக வேண்டும். இங்கே விலை என்பது அதிக விளைச்சலுக்காக மற்றும் சீசனல்லாத ரகங்களை விளைவிக்க இடப்படும் செயற்கை ரசாயனங்களும் பூச்சிக் கொல்லிகளும் ஏற்படுத்தும் விளைவுகள்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து அந்நீரில் காய்கறிகள் மற்றும் பழங்களை மூழ்குமாறு சிறிது நேரம் வைத்துவிட்டு. பிறகு சுத்தமான நீரில் கழுவினால் அவற்றின் மேல் படிந்துள்ள ரசாயனங்களில் இருந்து நம்மை ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.
ஆர்கானிக் பால் மற்றும் பால் பொருட்கள்
சில திடீர்க் கடைகளில் ஆர்கானிக் பால் மற்றும் பால் பொருட்களைப் பார்க்க முடிகிறது. உண்மையில் ஆர்கானிக் பால் தரும் மாட்டின் தாய்ப் பசுவும் ஆர்கானிக் விளை பொருட்களால் செய்யப் பட்ட தீவனத்தை மட்டும் உண்டிருக்க வேண்டும். அவற்றிக்கு எந்த நோய் தடுப்பூசிகளோ, ஆன்டிபயோட்டிக் மருந்துகளோ தரப்பட்டிருக்கக் கூடாது. ஆர்கானிக் பால் வாங்குபவர்கள் இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு வாங்குவது நல்லது.
ஆர்கானிக் சர்க்கரை, உப்பு மற்றும் மசாலா பொருட்கள்
இப்போது மேலே சொன்ன அதே வழியில் சிந்தித்தால் உங்களுக்கே உண்மை நிலை புரியும். பல கடைகளில் வெள்ளை கிறிஸ்டல் சர்க்கரை, சற்றே வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஆர்கானிக் என்ற முத்திரை குத்தப்பட்டு விற்கப் படுகிறது. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுக்கும் அதே கதை தான்.
மலைகளில் இயற்கையாக விளையும் சில பொருட்களை ஆர்கானிக் என்று சொல்லி இரு மடங்கு விலைக்கு விற்பதும் நடக்கிறது. இவற்றின் நம்பகத் தன்மை குறித்து ஆராய்ந்து அறிய வேண்டும். அரசாங்கம் ஆர்கானிக் கடைகளை இன்னும் கொஞ்சம் நுண்ணோக்கி கொண்டு பார்த்தல் நலம்.
உண்மையாகவே இயற்கை வழியில் வாழ்பவர்கள் குடிப்பதற்கு நிலத்தடி நீர்தான் பயன்படுத்துகிறார்கள். சுத்திகரிக்கப் பட்ட நீரை பருகி, அதன் மூலம் ஏற்படும் கால்சியம் மற்றும் தனிமங்கள் பற்றாக்குறைக்கு மாத்திரை வாங்கி உண்டு சிறுநீரகக்கல் வரை கொண்டு சென்று அதற்கும் மாத்திரை உண்ணும் நிலை வரை செல்வதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்களின் நுகர்வு நீரில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.
அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் சரிவிகித ஊட்டச்சத்து உணவை இயற்கை முறையில் அளிக்க வேண்டுமென்றால் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். ஆபத்தைத் தரும் அரைகுறை விழிப்புணர்வை விடுத்து நிதானமாக முழுமையான இயற்கை உணவுக்கு மாறுவோம். நேற்று க்யுபாவுக்கு சாத்தியமானது நாளை நமக்கும் வசமாகும்.